தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப் பிரதிநிதிகளை நியமிக்காமல் காலங்கடத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை கடந்த ஜனவரி 6, 2026 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனேயே, எதிர்க்கட்சி தனது தரப்புப் பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்துமபண்டார, இரா.சாணக்கியன், நிசாம் காரியப்பர் மற்றும் மனோ கணேசன் ஆகிய நால்வரின் பெயர்களையும் பரிந்துரைத்து அனுப்பி வைத்தது.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் இதுவரை தனது தரப்புப் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்கவில்லை. இது தேர்தலைத் திட்டமிட்டுத் தள்ளிப்போடும் ஒரு நகர்வே என அவர் குறிப்பிட்டார்.

வன்முறைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின், ஒரு முறையான அதிகாரப் பகிர்வு மாதிரி அவசியம் எனச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், உள்நாட்டுப் பொறிமுறைகள் பற்றிப் பேசும் அரசாங்கம், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் கூட ஆர்வம் காட்டவில்லை எனக் கவலை வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, அரசாங்கத் தரப்புப் பெயர்களை உடனடியாக வழங்கித் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version