பத்தரமுல்ல பகுதியில் சர்வதேச தரத்திலான ஒரு பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்கும் நோக்கில், உல்லாச தீவு பொழுதுபோக்கு மையம் (Frolic Island Recreational Hub) திட்டத்தை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) நடவடிக்கை எடுத்துள்ளது.
தியவன்னா ஓயாவின் இரு கரைகளையும் அண்மித்த 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது காணித் துண்டுகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் (International Competitive Bidding) மூலம், தகுதியான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு இந்தக் காணிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் பொழுதுபோக்குத் திட்டங்களுக்காக வழங்கப்படும்.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே இப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர்வழிச் சீரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளது.
வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) விருந்தகத்தைச் சூழவுள்ள பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், புதிய பொழுதுபோக்கு மையம் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.