புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களில், ஆபாச இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவரைச் சந்தேகநபராகப் பெயரிட்டு உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் ருவந்திகா மாரசிங்க உத்தரவிட்டார்.
இந்தத் தவறு திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது கவனக்குறைவால் நேர்ந்ததா என்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆழமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
ஆபாச இணைய முகவரியைக் கொண்டுள்ள ஆசிரியர் கையேடு மற்றும் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை மன்றுக்குச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தவறான அச்சிடுதல் காரணமாக அரசாங்கத்திற்கு 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். குற்றவாளிகள் ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னதாகச் சிஐடி விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வலியுறுத்தினார்.
தற்போது வரை 35 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) இரண்டு விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் தடயவியல் ஆய்வுக்கு (Forensic Audit) உட்படுத்தப்பட்டுள்ளதாகச் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.