தடையின் அடிப்படையே பொய்யானது- உயர் நீதிமன்றத்தில் வைகோ அதிரடி வாதம்; வழக்கு ஒத்திவைப்பு!

dailythanthi 2026 02 05 zok8nold vaiko33 1

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் வைகோ நேரில் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தனி நாடு அமைக்க முயல்கிறார்கள் என்ற மத்திய அரசின் வாதத்தை வைகோ முற்றிலுமாக மறுத்தார். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ அல்லது தலைவர் பிரபாகரனின் உரைகளிலோ அத்தகைய நோக்கம் இருந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார். “பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஒரு துளி இடம் கூட இருந்ததில்லை” என ஆதாரங்களுடன் விளக்கினார்.

ஆயுதப் போராட்டம் குறித்து எழுந்த கேள்விக்கு, 1948 ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தை மேற்கோள் காட்டி பதிலளித்தார். அடக்குமுறைக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக மக்கள் புரட்சி செய்வது நியாயமானது என ஐ.நா. அங்கீகரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நெல்சன் மண்டேலா ரிவோனியா நீதிமன்றத்தில் கூறியதைப் போல, அரசாங்கம் ஆயுதங்களால் ஒடுக்கும்போது மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது என்று வாதாடினார்.ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide) என்றும், அதற்கான நீதி கிடைக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பெப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

Exit mobile version