மியான்மரில் ஆயிரக்கணக்கான சீனக் குடிமக்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடி மையங்களை நடத்தி வந்த பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் (Kokang) பிராந்தியத்தைச் தளமாகக் கொண்டு இந்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி சீனா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்திச் சென்று, அவர்களைச் சித்திரவதை செய்து சட்டவிரோத இணைய மோசடிகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சீனக் குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் பல கோடி ரூபாய்களை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இக்குடும்பம் சொந்தமாக ஆயுதக் குழுக்களைப் பராமரித்து வந்ததோடு, கொலை மற்றும் ஆள் கடத்தல் போன்ற பாரிய குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சீன அரசாங்கம் மியான்மர் இராணுவ ஆட்சிக்குக் கொடுத்த கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து, இக்குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுச் சீனாவிற்குக் கடத்தி வரப்பட்டனர்.
சீன நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இவர்களது செயல்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என்றும் மனிதாபிமானமற்றவை என்றும் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குடும்பத் தலைவர்கள் உட்பட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இயங்கும் இவ்வாறான “மோசடி ஆலைகளை” (Scam Factories) முழுமையாக ஒழிப்போம் எனச் சீனா மீண்டும் சூளுரைத்துள்ளது. இந்தத் தண்டனை நிறைவேற்றம், எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்ட ஒரு மிகக்கடுமையான எச்சரிக்கையாக சர்வதேச மட்டத்தில் பார்க்கப்படுகிறது.