கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக நெடுங்கேணியில் மக்கள் போராட்டம்: அரசுக்கு எம்பி சாணக்கியன் கடும் எச்சரிக்கை!

624255490 1466493095479966 5510710955406618043 n

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய கிவுல் ஓயா (Kiul Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெடுங்கேணியில் இன்று (02) பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நெடுங்கேணி பிரதேச செயலாளரை நேரில் சந்தித்து இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி மகஜர் ஒன்றை கையளித்தார்.

இது ஒரு சிறிய போராட்டமே, எனினும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் இத்திட்டத்தைத் தொடர்ந்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சாணக்கியன் இதன்போது எச்சரித்தார். மக்களின் இந்த எதிர்ப்புக் குரலை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்திட்டம் முன்மொழியப்பட்டது.பொருளாதார நெருக்கடி காரணமாக 2023-இல் நிறுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது ரூ. 23,456 மில்லியன் திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version