ஒட்டகங்களுக்கு அதிகாரபூர்வ கடவுச்சீட்டு: சவூதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கை!

336t33r preview

சவூதி அரேபியாவின் அடையாளம் மற்றும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள ஒட்டகங்களுக்கு இனி அதிகாரபூர்வ கடவுச்சீட்டுகள் (Passport) வழங்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பைச் சவூதி சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.

பச்சை நிற அட்டையைக் கொண்ட இந்த கடவுச்சீட்டில், சவூதி அரேபியாவின் தேசிய இலச்சினை மற்றும் தங்க நிறத்திலான ஒட்டகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் ஒரு பிரத்தியேக அடையாள எண் வழங்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறன் குறித்த தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.

ஒட்டகங்களின் உரிமையாளர்களைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தவும், விற்பனை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் இது உதவும்.

ஒட்டக அழகுப் போட்டிகளின் போது சில உரிமையாளர்கள் ஒட்டகங்களின் தோற்றத்தை மாற்ற ஊசி போடுவது போன்ற (Botox) சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கடவுச்சீட்டு முறை மூலம் இத்தகைய முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்.

சவூதியில் உள்ள சுமார் 22 லட்சம் ஒட்டகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்க இது வழிவகுக்கும்.

அரேபிய தீபகற்பத்தில் ஒட்டகங்கள் போக்குவரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடையாளமாகத் திகழ்கின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, சவூதி மலைப்பாறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒட்டகச் சிலைகள் சுமார் 7,000 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version