இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த போதே, இந்திய அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காயமடைந்த 4 மீனவர்கள் காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 6 மீனவர்களை மீட்கக் கடற்படைக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தௌிவான விசாரணை கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எமது எல்லைக்குள் வந்து தாக்கும் வரை கடற்படை என்ன செய்தது? என அகில இலங்கை நெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டிரோன் மென்டிஸ் கேள்வி எழுப்பியதுடன், வெளிப்படையான விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்புத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்தொழில் உறவுகளில் மீண்டும் ஒருமுறை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

