அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (29) நடைபெற்றது.
இதில் வைத்தியர்கள், பல் வைத்தியர்கள், தாதிகள், இடைநிலை மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையின் அனைத்துத் தரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளின் போது, தரங்களுக்கு இடையிலான பிரிவினையின்றி ஒரே குழுவாக ஒன்றிணைந்து வலுவாகச் செயற்பட இங்கு இணக்கம் காணப்பட்டது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் எண்ணிக்கையை இற்றைப்படுத்துதல், மருந்து மற்றும் உபகரணத் தட்டுப்பாடு, மருந்து மற்றும் உபகரணங்களின் தரம் தொடர்பான பிரச்சினைகள், வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் சாசனமொன்றை நிறுவுதல் மற்றும் முன்மொழியப்பட்ட ஆரம்ப சுகாதார சேவை மறுசீரமைப்பு ஆகிய விடயங்களில் அனைத்துச் சங்கங்களும் பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படவுள்ளன.
அதேவேளை, ஒவ்வொரு சேவைப் பிரிவினருக்கும் உரித்தான தனித்துவமான பிரச்சினைகளின் போது, அந்தந்தப் பிரிவினர் தனித்தனியாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டது.