அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கரையொதுங்கிய ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 3 அடி நீளமும், 25 முதல் 50 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை என மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அல்லது மாற்றங்கள் காரணமாக இந்த ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கருதுகின்றனர்.
உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆமைகள் குறித்து அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைய நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.

