மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இவர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
எப்போது நிகழ்ந்தது? கடந்த வியாழக்கிழமை (29) மாலை, சிறைச்சாலை கண்காணிப்பாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி தனது நன்னடத்தை காரணமாக வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி (சுதந்திர தினம்) விடுவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் எனச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக விடுதலையாகவிருந்த நிலையில், அவர் தப்பியோடியமை அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய கைதியைக் கண்டுபிடிப்பதற்காக மாத்தறை மற்றும் பாணந்துறை பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

