போர் வெற்றியைப் பேச ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இல்லை- நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆவேசம்!

image 1345fe3a72

78-ஆவது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் போர் வெற்றிகள் குறித்துக் குறிப்பிடத் தவறியதைச் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாகச் சாடியுள்ளார்.

நாமலின் உரையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் சுதந்திர தினங்களில் உலகப்போர் வெற்றிகள் மற்றும் இராணுவப் பிரிவுகளின் சாதனைகளைப் பெருமையுடன் நினைவுகூர்கின்றன. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘டித்வா’ சூறாவளிப் பணிகளைப் பற்றிப் பேசினாரே தவிர, பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவத்தின் உண்மையான வெற்றியைப் பேசத் தயங்குகிறார்.

நாங்கள் தமிழ் மக்களுடன் போர் புரியவில்லை, பயங்கரவாதத்துடனேயே போர் புரிந்தோம். இந்த உண்மையைச் சுதந்திர தினத்தன்று உரக்கச் சொல்ல நாட்டுத் தலைவருக்கு ‘முதுகெலும்பு’ இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர்கள் பகிரங்கமாக மதத் தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல். குறிப்பாகத் திருகோணமலை போன்ற பகுதிகளில் மதத் தலைவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகுந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனை விட ராஜபக்ஷக்கள் மீதான அரசியல் பழிவாங்கல்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அதற்காகவே புதிய சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

சுதந்திர தினத்தன்று நாட்டின் ஒரு பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றி ஹர்த்தால் நடத்தப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளாமல் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரு தரப்பினருக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் வழங்கிவிட்டு மற்றவர்களை ஒடுக்குவது உண்மையான ஜனநாயகம் அல்ல என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Exit mobile version