ஒன்றரை மாதக் குழந்தையை ₹3.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 8 பேர் கைது!

1945650 baby

சென்னையில் தனது ஒன்றரை மாதக் குழந்தையை 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கே இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் பிறந்த தந்து நான்காவது ஆண் குழந்தையை, வறுமை அல்லது இதர காரணங்களுக்காகத் தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிக்கு கடந்த 19 ஆம் திகதி 3,80,000 இந்திய ரூபாய் மதிப்பிற்கு அந்தக் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

இரகசியத் தகவல் மூலம் இந்த சட்டவிரோத விற்பனையை அறிந்த காசிமேடு காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை விற்ற பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை, தற்போது பாதுகாப்பாக அரச காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டவிரோதக் குழந்தை தத்தெடுப்பு மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Exit mobile version