இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

FB IMG 1770382807579

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியான தர்லை (Tarlai) பகுதியில் அமைந்துள்ள கதீஜா துல்குப்ரா (Khadija Tul Kubra) ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையின் போது, தற்கொலை குண்டுதாரி ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைய முயன்றுள்ளார். நுழைவாயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, பின்னர் தனது உடலில் கட்டியிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

170-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பாகிஸ்தான் கிளை (ISPP) தனது டெலிகிராம் சேனல் ஊடாகப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் புகைப்படத்தையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மேரியட் ஹோட்டல் (Marriott Hotel) குண்டுவெடிப்புக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இத்தாக்குதல் தொடர்பாகப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பெஷாவர் மற்றும் நௌஷேரா ஆகிய பகுதிகளில் அதிரடிச் சோதனைகளை நடத்தி, தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவர் உட்பட நான்கு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இத்தாக்குதலைக் கடும் சொற்களால் கண்டித்துள்ளதுடன், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

 

 

Exit mobile version