ஆர்க்டிக் அதிகாரப் போட்டி: கிரீன்லாந்தில் கனடா மற்றும் பிரான்ஸ் தூதரகங்கள் திறப்பு!

6985c77d0e571f001d8fcbd6

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக விடுத்து வரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா தனது முதலாவது இராஜதந்திர அலுவலகத்தை கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் இன்று (2026 பெப்ரவரி 06) உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது “தேசிய பாதுகாப்புக்கு அவசியமானது” எனக் கூறி வருவதுடன், அதற்கு இணங்காத நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் டென்மார்க் மீது வர்த்தக வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வருகிறார்.

இந்தச் சூழலில் கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கிரீன்லாந்திற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அங்கு புதிய தூதரகங்களைத் திறந்துள்ளன.

கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சைமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

கனடாவின் முதல் சுதேச இனத்தவர் ஆளுநர் நாயகம் மேரி சைமன், கனடா மற்றும் கிரீன்லாந்துக்கு இடையிலான கலாசார மற்றும் இன ரீதியான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடிய கடலோர காவற்படை கப்பல் ஒன்றுடன் அதிகாரிகள் குழு நூக் நகருக்குச் சென்றுள்ளது. இது கிரீன்லாந்தின் இறையாண்மைக்குக் கனடா வழங்கும் ஆதரவின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களிலிருந்து கிரீன்லாந்தைப் பாதுகாக்க டென்மார்க் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேபோன்ற விமர்சனங்களை அவர் கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியம் குறித்தும் முன்வைத்துள்ளார்.

ஆர்க்டிக் பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கனடா 1 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

மேலும் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு முழுவதும் இராணுவப் பிரசன்னத்தை உறுதி செய்யப் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இதுவரை ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா மட்டுமே கிரீன்லாந்தில் தூதரகங்களைக் கொண்டிருந்தன.

இன்று கனடாவுடன் இணைந்து பிரான்ஸ{ம் தனது புதிய தூதரகத்தைத் திறந்துள்ளமை, நேட்டோ நட்பு நாடுகள் கிரீன்லாந்தின் இறையாண்மைக்கு வழங்கும் ஆதரவை உறுதிப்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

Exit mobile version