அதிர்ச்சித் தகவல்: கொழும்பு பேருந்து ஓட்டுநர்களில் 60% பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

FB IMG 1768978130584 1024x675 1

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களில் சுமார் 60 சதவீதமானோர் பாரியளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்துக்களில் 2,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,000 பேர் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர்.

50 சதவீத விபத்துக்களுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம். இதில் பெரும்பாலானோர் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதியாகியுள்ளது.

பெஸ்டியன் மாவத்தையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 53 பேருந்து ஓட்டுநர்களில் 10 பேர் (16%) போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. சோதனையிலிருந்து தப்பிக்க அடுத்த நாள் பல ஓட்டுநர்கள் பணிக்கு வரவில்லை என்பதால், உண்மையான பாவனை வீதம் 60% ஆக இருக்கலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இனிமேல் சாதாரண கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle License) இருந்தால் மட்டும் பேருந்துகளை ஓட்ட முடியாது. முறையான பயிற்சிக்கு பின் வழங்கப்படும் விசேட அனுமதிப்பத்திரம் இனி கட்டாயமாக்கப்படும்.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள விரும்பும் ஓட்டுநர்களுக்கு அரசாங்க செலவில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். சட்டத்தை மீறும் ஓட்டுநர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version