பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘மூன்வாக்’ (MOONWALK) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம், நடிகராக அறிமுகமாவது குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் “இந்தப் படத்தில் நான் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்துள்ளேன். எனக்கென்று தனியாகக் கதாநாயகி எல்லாம் கிடையாது.”
இந்தப் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் இரண்டு வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இறுதியில் அந்த ஒரு காட்சியை வெறும் 10 நிமிடங்களில் படமாக்கி முடித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் கேமராவிற்கு முன்னால் தோன்றுவது இது முதல் முறையல்ல என்றும், 1997-ல் ‘வந்தே மாதரம்’ பாடல் காலத்திலிருந்தே நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரபுதேவாவுடன் இணைவது குறித்துப் பேசிய ரஹ்மான், “பிரபுதேவா இந்த உலகின் ‘ஐகான்’. இந்தியாவின் பெருமை. அவருடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
‘காதலன்’ போன்ற மெகா ஹிட் படங்களைத் தொடர்ந்து, மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்துள்ளதால் ‘மூன்வாக்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.