ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். உடல் நலத்தை சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகுவதுதான் சிறப்பானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
காலையில் வெதுவெதுப்பான நீரை பருகுவது, உணவுக் குழாயில் முந்தைய நாள் முழுவதும் உட்கொள்ளப்பட்ட உணவுகளின் அனைத்து எச்சங்களையும் அகற்ற உதவும். அத்துடன் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வழிவகுக்கும். எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டிருந்தால் செரிமான செயல்முறையை எளிதாக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.
எடை குறைப்புக்கு வித்திடும்
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் உடலின் வெப்பநிலையை உயர்த்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். அதிக கொழுப்பை எரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீருடன் சில துளிகள் எலுமிச்சை சாறும் கலந்து பருகலாம்.
உடலின் பி.எச்.அளவை பராமரிக்க உதவும்
உடலுக்கு தேவையான பி.எச். அளவை பராமரிக்க தொடர்ந்து வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது அவசியமானது. செரிமான செயல்முறையின்போது அஸ்கார்பிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் எளிதில் ஜீரணமாகிவிடும். அதனை ஈடு செய்து பி.எச் அளவை நிர்வகிக்க வெதுவெதுப்பான நீர் துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றின் செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுபவை. வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் அவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவும்.
சரும செல்களை பாதுகாக்கும்
உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும். வெதுவெதுப்பான நீர், உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியது. உடலில் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதால்தான் எளிதில் நோய்வாய்ப்படுவது, விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யவும் உதவும்.
#LifeStyle
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment