திரையுலகின் உயரிய விருதான 98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து ‘HOME BOUND’ திரைப்படம் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
‘சிறந்த சர்வதேச திரைப்பட’ (Best International Feature Film) பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்படுவதற்கான தகுதிப் பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் கதையை இப்படம் மிகவும் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறது. இந்திய சமூகத்தில் தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் எத்தகைய பாகுபாடுகளையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச அரங்கில் சமூக அவலங்களைப் பேசும் இந்தியத் திரைப்படம் ஒன்று இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், இந்தியத் திரைத்துறையினரும் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.