‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ – மீண்டும் ஷங்கர் – வடிவேலு கூட்டணி
‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படம் நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே தடைப்பட்டு நின்ற இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலுவுக்கும் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இந்த படம் பல ஆண்டுகளாக படப்பிடிப்பு தொடராமல் இருக்கிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ் விடயம் தொடர்பில், இயக்குநர் ஷங்கர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே விரைவில், மீண்டும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வடிவேலு நடிப்பில் வெளியாகிய இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மிகப்பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்தக் கூட்டணி மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Leave a comment