தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – முக்கால் கிலோ
சீரகச்சம்பா அரிசி – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 200 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லித் தழை – அரை கட்டு (2 கைப்பிடி)
புதினா – கால் கட்டு (ஒரு கைப்பிடி)
கெட்டித் தயிர் – கால் கப்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பால் – அரை டம்ளர்
எலுமிச்சை – கால் மூடி
ப்ரிஞ்சி இலை – 3
எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை – சிறிய துண்டு
பொடிக்க
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
அன்னாசிப்பூ – ஒன்று
ஜாதிக்காய் – சிறிய துண்டு (மிளகு அளவு)
செய்முறை
சின்ன வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நாட்டுக்கோழித் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தயிருடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிசறி தனியாக வைக்கவும்.
பொடிக்க கொடுத்துள்ளவற்றைப் பொடித்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பொடித்த மசாலா போட்டு தாளித்த பின்னர் , நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து வதக்கி, தயிரில் கலந்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் பால் சேர்த்து, அரிசியின் அளவைவிட ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசியையும், முக்கால் பதம் வெந்த நாட்டுக்கோழித் துண்டுகளையும் சேர்க்கவும்.
உப்பு சரிபார்த்து மெதுவாக கிளறிவிட்டு மூடிவைத்து வேகவிடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து, மீண்டும் கலந்துவிட்டு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.
10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து வெந்ததை சரிபார்த்து ஒரு ஃபோர்க் கொண்டு கிளறினால் சாதம் உடையாமல் இருக்கும்.
சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார். சாலட் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறலாம்.
#LifeStyle
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment