திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், சசிகுமார் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” டூரிஸ்ட் ஃபேமிலி படம் பலரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது.
ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம். வித்தியாசமான படம் பண்ணலாம் என்ற நம்பிக்கை இந்த படம் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். பேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.