இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளாகக் கருதப்படும் பத்ம விருதுகள் 2026-ஆம் ஆண்டிற்காக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம் மற்றும் பொதுச்சேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இம்முறை சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் பத்ம விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விருது வென்ற திரை நட்சத்திரங்கள்:
மம்மூட்டி (பத்மபூஷன்): மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவன் (பத்மஸ்ரீ): பன்மொழி நடிகர் மாதவனுக்குச் சினிமாவின் பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தர்மேந்திரா (பத்மவிபூஷண்): மறைந்த ஹிந்தி திரையுலக ஜாம்பவான் தர்மேந்திராவுக்கு மரணத்திற்குப் பின் பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மபூஷன் விருது வென்ற தனது ஆத்ம நண்பர் மம்மூட்டிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான வாழ்த்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்:
“நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும், ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். வாழ்த்துகள்!”
இந்த விருது அறிவிப்பானது இந்தியத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.