இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
படம் எதிர்வரும் ஜனவரி 9-ஆம் திகதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் வெளிமாவட்டங்களில் தொடங்கப்பட்டாலும், சென்னையில் இதுவரை முதல் நாள் காட்சிக்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை.
படத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இன்று வரை சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் இழுபறி நிலை காணப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் மேனன் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எச்.வினோத்தின் முந்தைய வெற்றிப் படங்களான ‘தீரன்’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்று இதுவும் ஒரு அழுத்தமான திரைக்கதையைத் தாங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தணிக்கைச் சிக்கல் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை வாரியத்தின் முடிவைப் பொறுத்தே படத்தின் சென்னை முன்பதிவு மற்றும் ரிலீஸ் உறுதி செய்யப்படும்.