நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் (Sreyas) பெயரில் பட வாய்ப்புக்காகக் கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) கேட்டதாகச் சீரியல் நடிகை மான்யா ஆனந்த் அளித்த பேட்டி சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மேனேஜர் ஸ்ரேயாஸ், இந்த அழைப்புகள் தன்னுடையது அல்ல என்றும், சம்பந்தப்பட்ட போலியான நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை மான்யா ஆனந்த் அளித்த பேட்டியில், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் ஒருவர் தன்னை அணுகி, பட வாய்ப்புக்காகக் ‘கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) செய்ய வேண்டும்’ எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
அந்த வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டி இணையத்தில் பகிரப்பட்டதால், தனுஷ் மற்றும் அவர் மேனேஜருக்கு எதிராக நடிகை குற்றம் சாட்டியது போலச் செய்திகள் வரத் தொடங்கின.
இதற்கு விளக்கம் அளித்த நடிகை மான்யா, “நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அந்த நபர் போலியாகக் கூட இருக்கலாம். தனுஷ் பெயரை இப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறி இருந்தேன். முழு பேட்டியைப் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தச் சர்ச்சை பற்றித் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்:
“முன்னர் ஜனவரி 2024, பிப்ரவரி 2025-இல் சொன்னது போல, என் பெயரில் அல்லது ‘வொண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films)’ நிறுவனத்தின் பெயரில் வரும் காஸ்டிங் கால் (Casting Call) அழைப்புகள் போலியானவை ஆகும்.”
“இந்த இரண்டு நம்பர்களும் என்னுடையது இல்லை. என் போட்டோவுடன் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம், திரைத்துறையில் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
