‘பிக் பாஸ் தமிழ்’ நான்காவது சீசனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகை சமியுக்தா, தனது இரண்டாவது திருமணமாகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனும், சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) முன்னாள் வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை மணக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சமியுக்தாவுக்குத் தமிழ்த் திரையுலகில் பல முக்கியக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. ‘காபி வித் லவ்’, ‘துக்ளக் தர்பார்’, ‘மை டியர் பூதம்’, ‘வாரிசு’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
சமியுக்தா, குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கரை முன்னர் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ரயான் என்ற ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருத்தா, ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிகிறார்.
அனிருத்தா கடந்த 2012ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்ற பெண்ணைத் திருமணம் செய்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். அண்மையில் தீபாவளி அன்று சமியுக்தாவும், அனிருத்தாவும் தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டு ஒன்றாகப் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும், இதற்காகச் சமியுக்தா திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்துச் சமியுக்தாவிடம் கேட்டபோது, “அனைத்தும் சமூக வலைத்தளத்தில் இருக்கின்றது. எங்களுக்குள் என்ன இருக்க வேண்டுமோ அது இருக்கிறது” என்று பதில் அளித்துள்ளார்.