தமிழ் சினிமாவில் ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஏற்பட்ட வீதி விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார்.
கவுகாத்தியில் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ரூபாலி பரூவா ஆகிய இருவரும் சாலையைக் கடக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த மோதலில் ஆஷிஷ், ரூபாலி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் என மூவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து தவறான செய்திகள் பரவுவதைத் தவிர்க்க, ஆஷிஷ் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை (Live) வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
“ஆமாம், நானும் ரூபாலியும் விபத்தில் சிக்கியது உண்மைதான். ஆனால் இது ஒரு சிறிய விபத்து. ரூபாலி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம், யாரும் கவலைப்பட வேண்டாம். விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநரும் நலமாக இருக்கிறார்.”
63 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி, 2023 ஆம் ஆண்டு பேஷன் டிசைனரான ரூபாலி பரூவாவைத் (50) திருமணம் செய்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதுடன், ஒரு வெற்றிகரமான யூடியூப் (Vlogger) சேனலையும் அவர் நடத்தி வருகிறார். விபத்துக்குப் பின் அவர் தானாகவே நடந்து சென்றதாகவும், பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.