இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘கல்கி 2898 AD’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகை தீபிகா படுகோன், இரண்டாம் பாகத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்று நடித்த ‘சுமதி’ கதாபாத்திரம் கதையின் மிக முக்கியமான பகுதியாக இருந்த நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபிகாவுக்குப் பதிலாக ஆலியா பட், பிரியங்கா சோப்ரா எனப் பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையில் அந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவர் இதில் இணைவது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் ‘யாஸ்கின்’ கதாபாத்திரத்திற்கும் பிரபாஸின் ‘பைரவா’ கதாபாத்திரத்திற்கும் இடையிலான மோதல் மிகத் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.