சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.
அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம். இவை இரண்டும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும்.
பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவவும். பன்னீர் முகத்தை சுத்தமாக்கும். சந்தனம் சருமத்தை குளிர்ச்சி அடைய செய்யும். முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்குவதோடு அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும். வாரம் இருமுறை இந்த பேஸ் பேக்கை பயன் படுத்தி வரலாம்.
எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும். தயிரை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்.
#beauty
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment