அழகுக் குறிப்புகள்
அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை
வளர்ந்து வரும் நாகரீக உலகில் “ஆண்களிற்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல” என அனைத்துத் துறையிலும் போட்டி போட்டு சாதனை படைத்து வருகின்றனர் இன்றைய உலகின் பாரதி கண்ட புதுமைப் பெண்கள். இருப்பினும், ஆண்களை விட பெண்களிற்கு கடமைகளும் பொறுப்புக்களும் சற்று அதிகம் என்றால் அது பொய் ஆகாது.
இவற்றிற்கு மத்தியிலும் அழகை மேம்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நேரமின்மை, குடும்ப சுமைகள், வேலைப்பளு, பண விரயம் என பல்வேறுபட்ட காரணங்களிற்காக அழகு நிலையம் செல்வத்தைத் தவிர்த்து வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய சமுதாயம் அழகு சாதன நிலையங்களை நாடுவதை தவிர்த்து வந்தாலும்இ சந்தையில் கிடைக்கும் புதிய புதிய தயாரிப்புக்களை பயன்படுத்தி தமது அழகை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் அவர்களின் அழகு மெருகேறுகிறதோ இல்லையோ, பக்கவிளைவுகளும் தேவையற்ற பணச் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அழகு சாதன தயாரிப்புக்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் ஒவ்வாமைஇ புற்றுநோய்இ தோல் நோய்கள் என பல்வேறு நோய்கள் உருவாகி வருகின்றன.
நாகரீக மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினருக்கு எம் கண்ணெதிரே கொட்டிக் கிடக்கும் இயற்கைப் பொருட்கள் தெரிவதில்லை. எவ்வித பக்கவிளைவுகளோஇ பணவிரயமோ இன்றி மிக இலகுவான முறையில் கிடைக்கும் வகையில் இயற்கை அன்னை அள்ளிக் கொடுக்கும் இக் கொடைகள் மிக இலகுவாகக் கிடைப்பதால் அவற்றின் அருமை எமக்குத் தெரிவதே இல்லை.
இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலாப நோக்கில் மட்டும் செயற்பட்டு வரும் கம்பனிகள், குறித்த இயற்கைப் பொருட்களை இலவசமாகவோ சிறு விலையிலோ பெற்று, அவற்றுடன் பலவிதப்பட்ட இரசாயனப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் தயாரிப்புகளை புதிய புதிய பெயர்களில் சந்தையில் அறிமுகப்படுத்தி இலாபம் சம்பாதித்து வருகின்றன.
பலவிதப்பட்ட இரசாயனப் பொருட்களை சேர்த்து தமது விளம்பர உத்திகளை பயன்படுத்தி, தமது தயாரிப்புக்களை மக்களிடையே அறிமுகப்படுத்திவரும் குறித்த நிறுவனங்கள் தமது விளம்பரங்களில் முன்னிலைப்படுத்துவது இயற்கைப் பொருட்களையே தவிர தாம் சேர்க்கும் இரசாயனப் பொருட்கள் அல்ல. அவர்கள் சம்பாதிப்பது இலாபம் ஆனால் அதனை பயன்படுத்தும் நாம் சம்பாதிப்பது நோய்கள் மட்டுமே.
எமது வீட்டுச் சமையலறை முதல் சுற்றுச்சூழல் முதல் பலதரப்பட்ட பக்கவிளைவுகளற்ற பொருட்களை மிக இலகுவாக இயற்கையாகப் பெற்றுக் கொள்ள முடியும். காற்றாழை, மஞ்சள், உப்பு, சீரகம், அரிசி வடித்த தண்ணீர், பால், தயிர், மோர், இளநீர், தேசிக்காய், கறிவேப்பிலை, மருதாணி இலை, செவ்வரத்தம் பூ, செவ்வரத்தம் இலை, ரோஜா இதழ்கள், நெல்லிக்காய், வெங்காயம், கரட், தக்காளி, வெள்ளரிக்காய், பீற்றூட், உருளைக் கிழங்கு, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய், முட்டை என எண்ணிலடங்காத பொருட்களை நாளுக்கு நாள் அள்ளிக் கொடுத்தவண்ணமே இருக்கிறாள் இயற்கை அன்னை.
ஆனால் அவற்றை விடுத்து நோய்களை விலை கொடுத்து வாங்க நாமே காரணமாகின்றோம். இதற்கு முக்கிய காரணம் எம்மில் இருக்கும் சோம்பல் தன்மையே. அவசர உலகில் வாழ்ந்து வரும் நாம் இலகுவில் பணம் கொடுத்து வாங்க முடிவதால் சந்தையில் கிடைக்கும் தயாரிப்புக்களை இப்போது இருந்த இடத்திலிருந்தே பெற்றுக் கொள்ள முடிவதால் அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். அதனால் படிப்படியாக அழகு மெருகேறுகிறதோ இல்லையோ படிப்படியாக பக்கவிளைவுகள் மட்டும் அதிகரித்துச் செல்கிறது என்றால் இதனை மறுப்பதற்கு இடம் இல்லை.
சமையலறையில் உள்ள போது, படிக்கும் போது, ஓய்வெடுக்கும் நேரங்களில் கிடைக்கும் சிறு நேர இடைவெளியேனும் சிரமம் பாராது இவ் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எம் அழகிற்கு நாமே அழகு சேர்க்கலாம். இவற்றால் பலன்கள் அதிகம், பக்கவிளைவுகள் இல்லை, அழகும் மெருகேறும், நேர வீண் விரயம் இல்லை, பணமும் சேமிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக திருப்தியும் கிடைக்கும்.
“சிந்தித்து செயற்படுவோம்இ உச்சி முதல் உள்ளங்கால் வரை இயற்கையால் மெருகூட்டுவோம்”
#LifeStyle
You must be logged in to post a comment Login