ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி, செப்டம்பர் 06 ஆம் திகதி 77 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் 76 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘ஒன்றிணைவோம்’ என்ற மகுடவாசகத்துடன் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள வருடாந்த சம்மேளனத்தில், கட்சி பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1946 செப்டம்பர் 06 ஆம் திகதியே டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அக்கட்சியே வெற்றிபெற்று அரியணையேறியது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆரம்பத்தில் ஐ.தே.கவிலேயே அங்கம் வகித்தார். கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி சுதந்திரக்கட்சியை உருவாக்கினார்.
52 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றிருந்தாலும், 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி கண்டது. வெறும் 8 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்துகூட ஐ.தே.கவுக்கு கிடைக்கவில்லை.
1960 இல் ஒரே ஆண்டுக்குள் இரு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றன. 19.03.1960 நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றிருந்தாலும் ஆட்சி நீடிக்கவில்லை. இதனால் 20.07.1960 தேர்தல் நடைபெற்றது. சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. உலகில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் இதுவாகும் (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க).
1965 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.தே.க., 1970 இல் தோல்வி கண்டது. எனினும், 1977 இல் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. நாடாளுமன்றில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றது.
1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது.
1982 மற்றும் 1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க.வே வெற்றிபெற்றது. 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி தொடர்ந்தது.
எனினும், 16.08.1994 அன்று நடைபெற்ற தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. ஐ.தே.கவின் 17 ஆண்டுகால தொடர் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. 09.11.1994 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் சந்திரிக்கா வெற்றிபெற்றார்.
1994 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தெரிவாகவில்லை. (2015 இல் ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றாலும் சு.கவை சேர்ந்த மைத்திரியே ஜனாதிபதியானார்.)
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசமைப்பு ரீதியில் ஜனாதிபதியாகியுள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி கண்டுள்ளார்.
எனவே, சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு, தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு வருடாந்த மாநாட்டை கொண்டாடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே நீடிக்கவுள்ளார். அவர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை 1994 இல் ஏற்றிருந்தார்.
ஆர்.சனத்
#SriLankaNews