உலகின் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்துக்கு எலான் மஸ்க் திடீரென சென்றார். பின்னர் டுவிட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதையடுத்து சில மணி நேரங்களில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ( சி.இ.ஓ.) பராக் அகர்வால் மற்றும் நிதி அதிகாரி நெட் ஜெகல், சட்ட நிர்வாகி விஜயா காடே, பொது ஆலோசகர் சின் எட்ஜெட் ஆகிய 4 முக்கிய அதிகாரிகளை அதிரடியாக நீக்கி எலான் மஸ்க் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதில் முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு( 2021) நவம்பர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் டுவிட்டரின் புதிய அதிபரான எலான் மஸ்க் அவரை நீக்கி உள்ளார். டுவிட்டர் நிறுவன ஒப்பந்தத்தின்படி ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும். இந்த தொகையினை டுவிட்டர் நிறுவனம் அவருக்கு வழங்க உள்ளது.
#world #technology