இலங்கை இதுவரையில் இல்லாத அளவிலான ஓர் நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம், சுனாமி, கொரோனா, பொருளாதார இடர்பாடுகள் என சந்தித்து வந்த இலங்கை 2022ம் ஆண்டு சந்தித்துள்ள நெருக்கடிகளை இலகுவாக சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டு நிலைகளுக்கு வழி தேடி பலர் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அதற்கான தேர்வுகள் கிடைக்கப்பெறாமையின் காரணமாக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டங்களானது கடந்த ஓரிரு வாரங்களுக்கு மேலாக நீடிக்கின்றது.
அதன்படி போராட்டங்களின் முதற் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்துக்கு அருகில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பலத்த போராட்டங்களை முன்னெடுத்திருந்த அதேவேளை, ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போது இராணுவப் பேருந்து போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல பொது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. குறித்த செத்த விபரங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் சரத் விஜயசேகர 32 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில், அடுத்தநாள் (ஏப்.01) குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு, குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பயங்கரவாதிகளின் தலையீடுகள் இருந்தது எனவும், குறித்த போராட்டக்காரர்களிடையே ஒரு குழு “அரபு வசந்தத்தை உருவாக்குவோம்” என்ற கோஷத்தை முன்வைத்திருந்தது எனவும், தெரிவித்திருந்தது.
அதே தினத்தில் அப்பொழுது அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்த அமைச்சர்கள் குறித்த போராட்ட விவகாரம் குறித்த விளக்கங்களை வழங்குவதற்காக ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த நிலையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இக்கருத்து குறித்த சர்ச்சையான பல கேள்விகளை ஊடகவியலாளர்கள் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து சில சமரசங்களை அமைச்சர்கள் முன்வைக்க முனைந்த போதும், குறித்த கருத்து மீது அவர்கள் தமது உறுதிப்பாட்டை முன்வைத்திருந்தனர். அதன்படி குறித்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல, எரிவாயு மற்றும் எரிபொருள் தேவைகள் குறித்து போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறித்த போராட்டங்களின் பின்னணியில் அடிப்படைவாதிகளின் ஊடுருவல் காணப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறாயினும் இதனைத் தொடர்ந்து போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிக்கொண்ண்டிருக்க, போராட்டங்களுக்கு முடிவு கட்டுவதற்கான ஓர் முயற்சி அரசாங்கத் தரப்பினரால் எடுக்கப்பட்டு வருவதாகவும் சில பல இராஜினாமாக்கள் அரங்கேற இருப்பதாகவுவம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
இதேவேளை இவ்வாறு வெளியாகிய செய்திகளில் பல செய்திகள் குறிப்பாக ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெள்ளியெறியுள்ளதாகவும், அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாகவும் பல உண்மைக்கு புறம்பான செய்திகளும் வெளியிடப்பட்ட நிலையில் அவை சம்பந்தப்பட்ட தரப்பினரால் புறக்கணிக்கப்பட்டன.
இந்நிலையில் அரச தரப்பினரின் நீண்ட உரையாடல்களுக்கு பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை அனைவரும் பதவி விலகுவதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக போவதில்லை எனவும் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்த அதேவேளை, புதிய அமைச்சரவை ஒன்றை ஸ்தாபிக்க முன்வருமாறு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்தனர்.
இதேவேளை, நாட்டின் நிதி, பொருளாதாரம் மற்றும் வெளி விவகாரங்கள் சார்ந்த விவகாரங்களை முன்னெடுக்கும் நோக்குடன் கல்வியமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிதியமைச்சராக அலி சப்ரி ஆகிய நால்வரும் ஜனாதிபதியால் இடைக்கால பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
எனினும் குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெற்று அடுத்த நாளே நிதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை இராஜினாமா செய்துகொண்டார். இதன்மூலம் இலங்கை வரலாற்றிலேயே அதி குறைந்த நாட்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தவராக அதாவது ஒருநாள் அமைச்சராக அலி சப்ரி வரலாற்றில் இடம்பெற்றார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் அரங்கேற்றங்கள் இடம்பெற்று வந்த வண்ணமே இருக்கின்றன
அது தொடர்பாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்…
#Artical #SriLanka