செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில் தவறான அல்லது சிக்கலான ஆலோசனைகளை வழங்குவதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் ChatGPT, Gemini, Meta AI, Grok மற்றும் DeepSeek ஆகிய ஐந்து பிரபலமான தளங்களிடம், ஐந்து வெவ்வேறு சுகாதாரப் பிரிவுகளில் தலா 10 கேள்விகளைக் கேட்டு அவற்றை மதிப்பீடு செய்தனர். ‘BMJ Open’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகளின்படி, மொத்த பதில்களில் சுமார் 50 சதவீதம் சிக்கலானவையாகவும், அதில் 20 சதவீதம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான நேரடித் தரவுகளில் இந்தத் தளங்கள் ஓரளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஊட்டச்சத்து மற்றும் தண்டு செல்கள் (Stem cells) போன்ற துறைகளில் மிகவும் மோசமான பதில்களையே வழங்கியுள்ளன. குறிப்பாக, இந்தத் தளங்கள் தவறான தகவல்களைக் கூட மிகவும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வழங்குகின்றன. எந்தவொரு தளமும் மருத்துவத் தரவுகளுக்கான முழுமையான அல்லது துல்லியமான மேற்கோள் பட்டியலை (Citation list) உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாரமும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல்நலம் தொடர்பான கேள்விகளை ChatGPT-யிடம் கேட்பதாக OpenAI தெரிவித்துள்ளது. இருப்பினும், மருத்துவ ஆலோசனைகளை வழங்க உரிமம் பெறாத இந்தத் தளங்கள், “அதிகாரப்பூர்வமானதாகத் தோன்றும், ஆனால் குறைபாடுகள் உள்ள பதில்களை” உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் தங்கள் உடல்நலக் குறைபாடுகளுக்கு AI செயலிகளை ஒரு முழுமையான வழிகாட்டியாகக் கருதாமல், தகுதியுள்ள மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதே பாதுகாப்பானது என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.