வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்திய சைபர் பாதுகாப்பு முகமை (CERT-In) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம் சைபர் குற்றவாளிகள் உங்களது ‘கடவுச்சொல்’ (Password) அல்லது ‘சிம் கார்டு’ (SIM Card) இல்லாமலேயே உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் பெற்றுவிட முடியும். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் நேரலையாகப் பார்க்கும் அபாயம் உள்ளது.
உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் எண்ணிலிருந்து “இந்தப் புகைப்படத்தைப் பார்க்கவும்” என்ற செய்தியுடன் ஒரு இணையதள இணைப்பு (Link) வரும். அந்த இணைப்பு பார்ப்பதற்கு ‘பேஸ்புக் ப்ரீவியூ’ (Facebook Preview) போலவே நம்பகத்தன்மையுடன் இருக்கும்.
அந்த இணைப்பைத் திறந்தவுடன், புகைப்படத்தைப் பார்க்க உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு உறுதிப்படுத்துமாறு கேட்கும். நீங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்ட அடுத்த நிமிடம், வாட்ஸ்அப்பின் ‘டிவைஸ் லிங்கிங்’ அம்சம் மூலம் உங்கள் கணக்கின் கட்டுப்பாடு குற்றவாளிகள் வசம் சென்றுவிடும்.
தெரிந்த நபர்களிடமிருந்து வந்தாலும், சந்தேகத்திற்குரிய மற்றும் தேவையற்ற இணைய இணைப்புகளைத் (Links) திறக்க வேண்டாம். எந்தவொரு தெரியாத இணையதளத்திலும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டாம்.
உங்களது வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ‘Linked Devices’ பகுதிக்குச் சென்று, உங்களுக்குத் தெரியாத சாதனங்கள் ஏதேனும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்க்கவும்.
இந்தத் தீவிரமான தொழில்நுட்பக் குறைபாடு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.