அரசியல்

21 இன் தலைவிதி இன்று நிர்ணயம்!

Published

on

பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், 21 இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாடு ’20’ ஆவது திருத்தச்சட்டம் ஊடாக மாற்றியமைக்கப்பட்டது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கைகளுக்குள் சென்றது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது  திருத்தச்சட்டமூலத்தில், பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. 20 இல் இருந்த அந்த ஏற்பாடு உள்வாங்கப்படவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி,  நாடாளுமன்றத்துக்கான அதிகாரங்களை பலப்படுத்துவதே ’21’ இன் பிரதான நோக்கமாக உள்ள நிலையில், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை, ஜனாதிபதி பதவி நீக்கலாம் என்ற ஏற்பாடு, அந்த நோக்கத்துக்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே, அந்த ஏற்பாடு உள்வாங்க்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்தவாறு , குறித்த ஏற்பாடு ’21’ இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்க முடியும் என்ற ஏற்பாடும் 21 இற்குள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மொட்டு கட்சி வசமே, பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே , அக்கட்சியின் இணக்கப்பாடின்றி ’21’ ஐ நிறைவேற்றுவதும் சவாலுக்குரிய விடயமாகும்.

அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்று  (02) கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 21 ஐ முன்வைக்க இருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் , பொதுத் தேர்தலொன்றின் பின்னர் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நாளில் இருந்து நான்கரை வருடங்கள் முடிவடைந்த பிறகே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த கால எல்லை இரண்டரை வருடங்களென ’20’ இல் குறைக்கப்பட்டது. ’21’ இலும் அந்த வரையறை தொடர்கின்றது. எனவே, ஜனாதிபதி தான் நினைத்தால் 2023 பெப்ரவரியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்.

2023 பெப்ரவரியில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வதற்காகவே, அந்த ஏற்பாட்டில் திருத்தம் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.சனத்

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version