இலங்கை
ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்
ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை 2023இல் பதிவு செய்யப்பட்ட 541 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒகஸ்டில் பதிவான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜூன் 2023இல் தொழிலாளர்கள் அனுப்பிய தொகையில் மொத்தம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஆகஸ்ட் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 26,131 ஆகவும், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 உடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 197,146 ஆகவும் இருந்தது.