இலங்கை
சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை நான் சிறையில் சந்தித்தேன் : பிள்ளையான் விபரங்கள்
சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை நான் சிறையில் சந்தித்தேன் : பிள்ளையான் விபரங்கள்
சிறையில் இருக்கும் போது, நான் சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை சந்தித்ததாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றில் இன்று ஒலிபரப்பான அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களுக்கு பின்னர், பிரித்தானிய ஊடகமான சனல் 4 பல விடயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது.
சனல் 4இனால் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம், இலங்கை அரசியல் பரப்பில் பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
குறித்த ஆவணப்படத்தில், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளர் என கூறப்படும் அசாத் மௌலானா, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், அதனை நடத்துவதற்கு செய்யப்பட்ட சதித்திட்டங்கள் மற்றும் நாட்டில் நடந்த பல கொலை சம்பவங்கள் குறித்து விபரித்திருந்தார்.
இந்த காணொளியில் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயர் பெரிதும் பேசப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தான் சிறையில் இருந்த நேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஹ்ரானின் சகோதரர் ஐ.எஸ் அமைப்பு மீதான ஈர்ப்பை கொண்டிருந்ததை தாம் அவதானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எந்தவொரு தாக்குதலுக்காகவும் அவரிடம் உதவிகளை கோரவில்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.