இலங்கை
மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: டக்ளஸ்
மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: டக்ளஸ்
கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 28.07.2023 இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்றும் ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.என். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, விவசாயம், சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிவபுரம் கிராமத்தில் நிரூபனமாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விழிப்புக் குழுக்களை வலுப்படுத்தி பொலிஸாருடன் இணைந்து செயற்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – சிவபுரம் கிராமத்தில் கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் குறித்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து விழிப்புக் குழுவினை உருவாக்கி கிராமத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் குறித்த கிராமத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் கடையடைப்பு கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கொக்குளாய் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக அவை எந்தக் காலப் பகுதிக்குரியவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
You must be logged in to post a comment Login