உலகம்
கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான உடனடி உதவிகள் குறித்து ஜி-7 நாடுகள் மீளவலியுறுத்தல்!
கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான உடனடி உதவிகளின் அவசியம் குறித்து மீளவலியுறுத்தியிருக்கும் ஜி-7 நாடுகள், இலங்கை விவகாரத்தில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் கடன்வழங்குனர்கள் கூட்டம் நடாத்தப்பட்டமையைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்துவரும் கடன்நெருக்கடி குறித்து ஜி-7 நாடுகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடுகளின் கடன் ஸ்திரத்தன்மை மீதான கடுமையான சவால்கள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் அடைவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் ஏனைய பூகோள சவால்களின் விளைவாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான உடனடி உதவிகள் மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பொதுவானதொரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்கான ஜி-20 நாடுகளின் முயற்சிக்கான முழுமையான ஆதரவு ஆகியவற்றின் அவசியத்தை நாம் மீளவலியுறுத்துகின்றோம்.
அண்மையில் கானாவுக்கான உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதி வழங்கியமையினை வரவேற்கின்றோம். அதேபோன்று பொதுவானதொரு செயற்திட்டத்துக்கு அப்பால் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியைப் பல்தரப்பு ஒத்துழைப்பின் ஊடாகவே கையாளவேண்டும்.
இத்தகைய பின்னணியில் இலங்கை விவகாரத்தில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் கடன்வழங்குனர்கள் கூட்டம் நடாத்தப்பட்டமையை பெரிதும் வரவேற்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இன்றைய ராசி பலன் 27.08.2023 - Today Rasi Palan - tamilnaadi.com