இலங்கை
யாழில் துப்பாக்கிசூடு பெண்ணொருவர் காயம்!
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவற்காக வடமராட்சி கிழக்கு காவல்துறையினர் சென்றவேளை சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு குழுவினருக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சிவில் உடையில் விசாரிப்பதற்காக சென்ற காவல்துறையினர் அந்த பிரதேச இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து இளைஞர்களும் சிவில் உடையில் இருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் சிவில் உடைதரித்த காவல்துறையினர் மற்றும் சீருடையுடன் 10 வரையான காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் இளைஞர்களை வீடு தேடி சென்றுள்ளனர். இதன்போது, வீட்டில் இருந்த பெண்கள், குடும்ப தலைவர்கள் இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் 15 முறை துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது, இதன்போது பெண் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த தாய் மற்றும் தந்தை ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் னாவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews
You must be logged in to post a comment Login