தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது எட்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் என ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். கஹ்ரமன்மராஸ் (Kahramanmaraş) பகுதியில் உள்ள அய்ஸர் சாலிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தச் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பாடசாலைக்குள் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஆளுநர் முகர்ரென் உன்லுயர் உறுதிப்படுத்தியுள்ளார். 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஆறு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி தெரிவித்துள்ளார். துருக்கியின் மற்றொரு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்திருந்த நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த இரண்டாவது தாக்குதல் நடந்துள்ளது.
பதின்வயது இளைஞரான தாக்குதல்தாரி, தனது தந்தைக்குச் சொந்தமான ஐந்து துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்கூடுகளுடன் பாடசாலைக்கு வந்து இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்தாரியின் தந்தை ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதுடன், பாதுகாப்பற்ற முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது பீதியடைந்த மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாடசாலையின் முதல் மாடி ஜன்னல்களில் இருந்து கீழே குதித்து ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தி வெளியானதும், பாடசாலை வளாகத்திற்கு வெளியே திரண்ட பெற்றோர்கள் கண்ணீருடன் தமது பிள்ளைகளின் நிலை குறித்துக் கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.