நடிகர் விஜய் நடிப்பில், அவரது இறுதித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரும் 27-ஆம் திகதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
சுமார் 500 கோடி இந்திய ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் திகதியே வெளியாக வேண்டியிருந்தது. இருப்பினும், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தணிக்கை சபையின் ஆய்வுக் குழு, சில காட்சிகளை நீக்கினால் ‘U/A’ சான்றிதழ் வழங்கலாம் எனப் பரிந்துரைத்தது. தயாரிப்பு தரப்பும் அதற்குச் சம்மதித்தது.
சான்றிதழ் வழங்கும் கடைசி நேரத்தில், மும்பையிலுள்ள தணிக்கை சபை தலைவருக்கு வந்த ரகசிய முறைப்பாடுகளை அடுத்து, படம் மறுஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) அனுப்பப்பட்டது.
படத்தின் காட்சிகள் குறித்து புகார் அளித்தது யார் என்பதைத் தணிக்கை சபை வெளிப்படுத்தாதது தயாரிப்பு தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தணிக்கை சபையின் இந்தத் திடீர் முடிவை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 20-ஆம் திகதி தீர்ப்பைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்திய ஊடகங்களின்படி வரும் ஜனவரி 27-ஆம் திகதி இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’, விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதான கடைசிப் படம் என்பதால், இந்தத் தீர்ப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.