அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியில் மே முதலாம் திகதி எனக் குறிப்பிடப்பட்டுள்ள வெசாக் பௌர்ணமி போயா தினத்தை, மே மாதம் 30 ஆம் திகதிக்கு மாற்றுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தில் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் (மல்வத்து பீடம்), வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் (அஸ்கிரி பீடம்), கரௌயங்கொடை மைத்திரி மூர்த்தி தேரர் (அமரபுர மகா நிகாய), ஸ்ரீ விமல ஸ்ரீ மகுன்னாவ தேரர் (ராமன்ய மகா நிகாய) பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
தற்போதைய அரச நாட்காட்டியில் மே 01 ஆம் திகதி வெசாக் தினமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சாஸ்திர ரீதியான ஆலோசனைகளின்படி, அன்றைய தினம் வெசாக் தினத்திற்குரிய நட்சத்திரப் பொருத்தம் அமையவில்லை எனத் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2026 மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருகின்றன. அதில் சரியான நட்சத்திரம் கூடிவரும் மே 30 ஆம் திகதியை உத்தியோகபூர்வ வெசாக் தினமாகப் பிரகடனப்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை நாட்காட்டியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.