முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு மக்கள் பெருந்திரளான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். மருத்துவமனை பணிப்பாளரை நேரில் வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்தும் மரணத்திற்கான காரணம் குறித்தும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
சிறுமியின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்”, “வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை மறைக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மருத்துவமனையின் கவனக்குறைவாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்ததா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.