அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த நவம்பர் 28ஆம் திகதி நீரில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
புதுமாத்தளன் பகுதியில் குறித்த நபரின் உடலம் மீட்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர், இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் (Electrical Engineering Division) பணியாற்றியவர் ஆவார்.
மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காணாமல் போன ஏனைய நான்கு கடற்படை வீரர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் சீரற்ற வானிலைக்கு மத்தியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த ஐந்து கடற்படை வீரர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.