இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர் (30 வயது), சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது ஐயருக்குக் காயம் ஏற்பட்டது.
சமீபத்திய மருத்துவப் பரிசோதனைகளில், ஐயருக்கு விலா எலும்புக் கூண்டு காயம் ஏற்பட்டு உள் இரத்தப்போக்கு (Internal Bleeding) ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, ஐயர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மருத்துவமனையில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் வலது கை துடுப்பாட்ட வீரரான ஐயரின் இந்த திடீர் காயம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அணி வீரர்கள் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.