சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டமியற்றும் சகாப்தம் முடிந்தது:
அதன்போது, ஆட்சியாளர்களின் தேவைகளுக்கு ஏற்பச் சட்டங்களை இயற்றுவதையும் அரசியலமைப்புகளை மாற்றுவதையும் கொண்ட சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதன்படி, தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்த்து எந்த முடிவும் எடுக்கப்படவோ, எந்தச் சட்டமூலங்களும் நிறைவேற்றப்படவோ அல்லது திட்டங்களும் எடுக்கப்படாது என்றும் ஜனாதிபதி அனுர குறிப்பிட்டார்.
மக்களின் நன்மை மட்டுமே ஒரே நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி, அவநம்பிக்கை அல்லது சந்தேகம் உள்ள பகுதிகளை ஆராய்ந்து, அது தொடர்பான முடிவுகளுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.