வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட “கோழைத்தனமான தாக்குதல்” என்று விபரித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளது.
உயிரிழந்த வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்குப் பயணித்துள்ளனர். “உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்,” என ACB தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ள ACB, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்,” அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
“இந்த ஒடுக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் எமது உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம்,” என்று சர்வதேச வீரர் ஃபஸல்ஹக் ஃபாரூக்கி தெரிவித்துள்ளார். மற்றொரு சர்வதேச வீரரான முகமது நபி, “இது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் ஏற்பட்ட துயரம்” என்றுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.