இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார் 10,500 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய திறன் மட்டுமே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நேற்றைய நிலவரப்படி குறித்த சிறைச்சாலைகளில் 36,728 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறையில் 1,400 கைதிகளை தடுத்து வைக்க முடியும் நிலையில், தற்போது 3,898 பேர் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறையில் 499 பேருக்கான இடமே உள்ளதாகவும் தற்பொழுது 2,958 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரிமாண்ட் சிறையில் 328 பேருக்கான இடவசதி இருந்தும் 2,664 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறையில் 991 பேருக்கான இட வசதி காணப்பட்ட போதிலும் 3,818 பேர் இருக்கின்றனர் எனவும் அதேபோல், அங்குனுகொலப்பலஸ்ஸ சிறையில் 1,047 பேருக்கான இடத்தில் 1,898 பேர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, நாட்டின் பிற சிறைகளிலும் இதேநிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 5 முதல் 6½ அடி பரப்பளவு கொண்ட சிறை அறையில் 1 முதல் 3 பேர் வரை இருக்கக்கூடிய நிலையில், தற்போது அதே அறைகளில் 17 முதல் 19 பேர் வரை அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறை அறைகள் மாலை 5.00 மணிக்கு பூட்டப்பட்டு மறுநாள் காலை 6.00 மணிக்கு திறக்கப்படுகின்றன. இதற்கிடையில் கைதிகள் மிகுந்த நெரிசலில் இரவைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.
கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் 15 முதல் 20 பேருக்கான இடம் மட்டுமே இருந்தாலும், தற்போது சுமார் 40 பேர் வரை அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ரசாயன பரிசோதனை அறிக்கைகள் தாமதமாக வெளிவருவதால், சில சந்தேகநபர்கள் 8 முதல் 10 மாதங்கள் அல்லது அதற்கு மேல் சிறையில் நீண்டகாலமாக தங்கவைக்கப்படுகின்றனர் எனவும் அவை விரைவாக வழங்கப்பட்டால், சிறைகளில் உள்ள சந்தேகநபர்கள் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும் என ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.